×

ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்


சென்னை: ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் கட்டுமான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (6.10..2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்கி வருகின்றார்கள். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா வளர்ச்சி பெறும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கையை வெளியிட்டு, சுற்றுலாவை தொழில் தகுதி பெறச் செய்துள்ளார். இதனால் சுற்றுலாத்துறை சம்மந்தமான தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கத்தொகை, மானியம் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகளை வருகை தர வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த படகு இல்லத்தில்ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது.

இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) அமைக்கப்படுகிறது.

இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்த வெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை (மோட்டார் இன்ஜின்) அமைக்கப்பட உள்ளது. இந்த கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

இரண்டு அடுக்கு உணவக பயணக் கப்பல் நீளம் 125 அடியும் அகலம் 25 அடியும் கொண்டதாகும். மிதக்கும் உணவகம் அமைக்கும் பணியில் முக்கியமான படகு அமைக்கும் பணியின் கட்டுமானம் முழுமையடைந்து முதல் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மிதக்கும் உணவகம் அமைக்கும் பணி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

இந்த பணிகளை பார்வையிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தொடர்ந்து முதலியார் குப்பத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகு குழாமில் இருந்து முதலியார்குப்பம் தீவுப்பகுதிக்கு செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் மு.பாபு அவர்களுடன் படகில் பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயிலுக்கு வருகைதந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடினார். மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வுகளில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் இ.கமலா உள்பட சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

The post ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Co. ,Ramachandran ,Minister of Tourism ,G. Ramachandran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்...